ஹெரோயின் பக்கட்டுகளுடன்
மாணவன் மடக்கிப் பிடிப்பு
அவதானத்துடன் இருக்க பெற்றோருக்கு எச்சரிக்கை
வகுப்பறைக்குள் ஹெரோயின் பக்கட்டுகள் வைத்திருந்த நிலையில் பாடசாலை மாணவன் ஒருவர்
பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.பொல்கஹவெல நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 13ல் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் ஒருவரே பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேக நபரான பாடசாலை மாணவனிடமிருந்து ஹெரோயின் மூன்று பக்கட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையை அடுத்து, குறித்த பாடசாலை மாணவனுக்கு ஹெரோயின் விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து இரண்டு ஹெரோயின் பக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இலங்கையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் வியாபாரம் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று பொல்கஹவெல நகர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றுக்குச் சென்ற பொலிஸார், அந்த பாடசாலையின் உயர்தர பிரிவு வகுப்பொன்றில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதலின் போது, 13ம் தரத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் ஒருவரிடமிருந்து மூன்று ஹெரோயின் பக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, அவருக்கு ஹெரோயின் பக்கட்டுகளை விநியோகித்த நபர் ஒருவரை மேலும் இரண்டு ஹெரோயின் பக்கட்டுகளுடன் மடக்கிப் பிடித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பாடசாலை செல்லும் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெற்றோர்களும், பாதுகாவலர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொள்கிறது.
விசேடமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் அதிகளவு பணம் செலவு செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறும் பொலிஸ் திணைக்களம் கோரிக்கை விடுக்கின்றது