Saturday, 9 November 2013

பொதுநலவாய அமைப்பின் இளைஞர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

ஒன்பதாவது பொதுநலவாய அமைப்பின் இளைஞர் மாநாட்டிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியூம் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை, மாகம் ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சகல இளைய தலைவர்களும் ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய இளைஞர்கள் பேரவையொன்றை ஸ்தாபிப்பதற்கான வாக்கெடுப்பு இம்முறை இளைஞர்கள் மாநாட்டில் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இறுதியாக நடைபெற்ற பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் 31 நாடுகளே பங்குபற்றியிருந்ததாகவும், இம்முறை 44 நாடுகளில் இருந்து இளைஞர் - யுவதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் லலித் பியூம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கலாசார வாகனத் தொடரணி மூலம் ரன்மினிதென்ன சினிமா பூங்காவிலிருந்து 44 நாடுகளின் இளைஞர் - யுவதிகளுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.