Thursday, 31 October 2013

பஸ் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தற்போது நடைமுறையிலுள்ள 9 ரூபா குறைந்தபட்ச கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ரூபா தொடக்கம் 27 ரூபா வரையான கட்டணங்கள் ஒரு ரூபாவாலும் 30 ரூபா தொடக்கம் 34 ரூபா வரையான கட்டணங்கள் இரண்டு ரூபாவாலும் 34 ரூபா தொடக்கம் 48 ரூபா வரையான கட்டணங்கள் மூன்று ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரை காலமும் இருந்த அதிகபட்ச பஸ் கட்டணமான 662 ரூபா கட்டணம் 46 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 708 ரூபாவாக அமையவுள்ளது.
இந்த பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய நகர்சேர் மற்றும் சொகுசு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய தெற்கு அதிவேக வீதியில் மஹரம தொடக்கம் காலி வரையான பஸ் கட்டணம் 500 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
இம்மாதம் 12 ஆம் திகதி பஸ்கட்டண திருத்தத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்தபோது, அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அகில இலங்கை பஸ் உரிமையாளர்களின் சம்மேளனம் அறிவித்திருந்தது.
எனினும் திருப்தியளிக்காவிட்டாலும் நாளை முதல் புதிய பஸ் கட்டணத்தை தாமும் நடைமுறைப்படுத்துவதாக சம்மேளனத்தின் செயலாளர் அஞ்ஜன இந்திரஜித் இன்று கூறியுள்ளார்.