Thursday, 31 October 2013

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள 37 நாடுகள் உறுதி அளித்துள்ளது


இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக இதுவரை 37 நாடுகள் உறுதிபடுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனை கூறினார்
ஏனைய நாடுகளும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் என நம்புவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணித்தால், அது பொதுநலவாய அமைப்பு மீதான பாரிய அழுத்தமாக அமையும் என பிரித்தானியா குறிப்பிடுகின்றது.
சர்வதேச வர்த்தகம் மற்றும் நாடுகளின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரச தலைவர் மாநாட்டில் கலந்து​கொள்வது முக்கியமானது என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹெக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, வில்லியம் ஹெக் இதனை குறிப்பிட்டுள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, பிரித்தானியா மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகார செயலாளர் டக்ளஸ் அலெக்சான்டர் முன்வைத்த யோசனைக்கு பதிலளுக்கும் வகையில், வில்லியம் ஹெக் இதனைக் கூறியுள்ளார்.