Wednesday, 30 October 2013

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மீண்டும் செயலிழப்பு


நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் இன்று மாலை முதல் மீள செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இன்று மாலை 4 மணியளவில் செயலிழந்ததாக மின்சார சபையின் நடவடிக்கை மற்றும் திட்டமிடல் பிரதி பொது முகாமையாளரும், ஊடகப் பேச்சாளருமான செனஜித் தசநாயக்க குறிப்பிட்டார்.
தவறான சமிக்ஙையின் காரணமாக அனல்மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விரைவில் கோளாறினை சீர்செய்து மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக ஒருசில மின்உற்பத்தி நிலையங்களில் திருத்த வேலைகள் துரிதமாக நிறைவுசெய்யப்பட்டு வருவதால், சில சந்தர்ப்பங்களில் குறுகியகாலத்திற்கு மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.