Wednesday, 18 December 2013

அரச அலுவலகங்களில் நிலவும் அலட்சியங்கள் SMS மூலம் புகாரிடும் முறை அறிமுகம்

ஜனவரி முதல் நடைமுறை
அமைச்சர் நவீன் திசாநாயக்க சபையில் அறிவிப்பு
 
அரச ஊழியர்களின் சேவையை மதிப்பீடு செய்து அவர்களுக்கு ஊக்குவிப்பு (போனஸ்) கொடுப்பனவுகளை வழங்க வேண்டும். இதன் ஊடாகவே அவர்களிடமிருந்து தரமான சேவையை எதிர்பார்க்க முடியும் என அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச சேவையில் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக எமது அமைச்சு தீவிர முயற் சிகளை மேற்கொண்டு வருகிறது. அரச ஊழியர்களின் கடமைகள் தொடர்பாக எமது அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் போது அரச ஊழியர்கள் 5 மணி நேரம் மட்டுமே வேலை செய்வது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
5 மணி நேரம் மட்டுமே ஒரு அரச ஊழியர் கடமை புரிந்தால் அரச நிர்வாக சேவையின் தரம் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவோம். இதனை முற்றாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக அரச நிறுவனங்களில் 5 எஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் அரச ஊழியர்களின் கடமை நேரம் தொடர்பாக அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் செய்யப்படவுள்ளன.
முதற்கட்டமாக குருநாகல் மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களில் இவை முன்னெடுக்கப்பட வுள்ளது. அத்துடன் அரச நிறுவன மொன்றுக்கு செல்லும் ஒருவர் தமக்கு தேவையான வேலையை செய்வதற்கு முடியாது போகுமிடத்து அதனை எஸ். எம். எஸ். குறுந்தகவல் ஊடாக முறைப் பாடு செய்து தேவையான தகவலைப் பெறுவதற்கான முறை ஒன்று ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது அரச ஊழியர் ஒருவரின் சம்பளம் மிகவும் குறைவானதாகவே காணப்படுகிறது. 40,000 ரூபா வரையிலான குறைந்த சம்பளத்தை பெறுகின்றனர். வெளிநாடுகளில் அரச ஊழியர் ஒருவரின் கடமைகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு அவருக்கு போனஸ் வழங்கும் நடவடிக்கையும் உள்ளன. இதேபோன்று இலங்கையிலும் போனஸ் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறினார்.
அரச முகாமைத்துவ, மறுசீரமைப்பு அமைச்சு உட்பட தெரிவுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.