மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியானது
எதிர்கால சவால்களை வினைத்திறனுடன் எதிர்கொள்ள துணை நிற்கும் என கல்வி
அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட பாடசாலையின் மாணவத்
தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப வைபவத்தில் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவர்கள் வகுப்பறைக் கற்றலினூடாக மாத்திரம் சிறந்த கல்வியைப் பெற்றுக்
கொள்ள முடியாது. மாறாக வகுப்பறைக் கற்றலுக்கு அப்பால்,விளையாட்டு, கலைகள்,
இலக்கியம் மற்றும் இதர பயன்மிக்க துறைகளில் மாணவர்கள் கால் பதிக்க
வேண்டும்.
அப்போது தான் அறிவையும், அனுபவத்தையும்,ஆற்றலையும், திறனையும் பெற்று எதிர்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்க முடியும்.
இத்தகையவற்றை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு தளமாக இந்த தலைமைத்துவ பயிற்சிப் பட்டறைகள் அமைந்துள்ளன.
தலைமைத்துவப் பயிற்சி மாணவர்கள் மத்தியில் ஆளுமையைக் கட்டியெழுப்பவும்
நடத்தைக் கோலங்களை மாற்றியமைக்கவும் நேர் சிந்தனையுடன் காரியங்களில்
ஈடுபடவும் துணை புரிகின்றன.
உயர் கல்வி அமைச்சினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி
ஆரம்பிக்கப்பட்ட போது கூச்சலிட்டவர்கள், அதனை தங்களது அரசியல்
பிரசாரங்களுக்காகப் பயன்படுத்தியவர்கள் இன்று தலைமைத்துவப் பயிற்சியின்
பெறுமதி மற்றும் பலாபலனை கண்டு மௌனித்து விட்டனர் எனவும் குறிப்பிட்டார்.