Saturday, 8 March 2014

சவுதியில் கலாநிதி பட்டம் பெற்ற பறகஹதெனிய மைந்தன்

குருநாகல் பறகஹதெனியைச் சேர்ந்த அஷ்ஷெய்க் M.R.M. அம்ஜத் ராஸிக் (ஸலபி) அவர்கள் 27.02.2014 வியாழக்கிழமை அன்று சவுதி அரேபியாவின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி கற்கையை நிறைவு செய்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

அன்றைய தினம் காலை 8.30 முதல் 11.30 மணி வரை இடம் பெற்ற இவரது ஆய்வு நூலின் மீதான விவாதத்தின் பெறுபேறாக “முதல் தரம்” என்ற உயர் பெறுபேற்றினை இவரது ஆய்வு பெற்றுக் கொண்டது. அத்துடன் உலக மக்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக அதை அச்சிட்டு விநியோகிக்க வேண்டும் என விவாதக் குழு சிபாரிசு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விவாதக் குழு உறுப்பினர்களாக மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அனீஸ் இப்னு அஹ்மத் தாஹிர் ஜமால் மற்றும் தம்மாம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி ஆதில் இப்னு ஹஸன் அலி அல் பரஜ் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாய்வு நூலின் மேற்பார்வையாளராக மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பத்ர் இப்னு முஹம்மத் அல் அம்மாஷ் இடம் பெற்றார்.

மேலும் பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் ஆலிம் கற்கைநெறியை முடித்த M.R.M. அம்ஜத் ராஸிக் (ஸலபி) அவர்கள் தனது கலைமானி மற்றும் முதுமானி கற்கைநெறிகளையும் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் முதல் தரத்தில் பெறுபேற்றினைப் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இவரே சவூதி அரேபிய பல்கலைக்கழகங்களிலேயே முதலாவதாக கலாநிதி பட்டம் பெற்ற இலங்கையர் என்பது விஷேட அம்சமாகும்.